துண்டு பிரசுரத்தில் மதிப்பெண் விளம்பரம் - காற்றில் பறந்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு!!!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாது. பின்னர், 10ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.


          முன்னதாக பொது தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளின் தர வரிசை பட்டியல் ரேங்க் முறையில்  இருந்து, கிரேடு முறையில் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மதிப்பெண் சதவீதத்தை பொறுத்து கிரேடு முறையும் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக ரேங்க் பட்டியலை வெளியிட்டு, தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்வதை தடுக்கவே இந்த கிரேடு முறை கொண்டு வரப்பட்டதாக அரசு அறிவித்தது. மேலும், இதுபோன்ற விளம்பரங்கள் செய்ய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் தரவரிசை பட்டியல் முதல், 2ம், 3ம் இடம் என விளம்பரம் செய்ய கூடாது என அரசு உத்தரவிட்ட பிறகும், வீடு வீடாக சென்று, தங்களது பள்ளிகள் குறித்த விளம்பரத்தை சில நிறுவனங்கள் செய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று, தங்களது பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக துண்டு பிரசுரத்தை வீடு வீடாக வினியோகம் செய்து வருகிறது.
அதில், “எம் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணாக்கரை வாழ்த்துகிறோம் எனவும், சாதனைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துகிறோம்... முன்னாள் மாணவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.
அரசின் உத்தரவை மீறி இதுபோன்ற துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தது தனியார் பள்ளி நிர்வாகமா அல்லது உண்மையான முன்னாள் மாணவர்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்று வீடு வீடாக துண்டு பிரசுரம் மூலம் விளம்பரம் செய்யும் தனியார் வணிக கல்வி வியாபாரத்தை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட ஆட்சியர், அரசு கல்வித்துறை ஆதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..