பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு

பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள், திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில், தேசிய, 'ஆர்க்கிடெக்' கவுன்சில் அங்கீகாரத்தில், 90 பி.ஆர்க்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 6,000 இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில், அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இந்தக் கல்லுாரிகள், 2015ல், அமலான விதிகளை பின்பற்றுகின்றன. இந்த ஆண்டு, 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில், கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்போது, ௮௦ மாணவர்களை சேர்க்கும் கல்லுாரிகளில், ௨௫ ஆசிரியர்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, ஆசிரியர்களை, ௫௦ ஆக உயர்த்துவதோடு, கல்லுாரியின் பரப்பளவையும், 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, ஏப்ரல், 19ல் வெளியிட்ட, ஆர்க்கிடெக் கவுன்சில், 'புதிய விதிகளின்படி, இன்றைக்குள், கல்லுாரிகள் தயாராக வேண்டும்' என, தெரிவித்துள்ளது.

இது குறித்து, கல்லுாரி கள் தரப்பில் கூறியதாவது: பி.ஆர்க்., கல்லுாரிகளில், சமீபகாலமாக இடங்கள் நிரம்புவதே அரிதாக உள்ளது. 'நாட்டா' என்ற தேசிய நுழைவுத்தேர்வு, மே, ஜூனில், தினமும் ஆன்லைனில் நடத்தப்படும். ஒருமுறை தேர்ச்சி பெறாவிட்டால், ஐந்து வாய்ப்புகள் தரப்பட்டன. இந்த நடைமுறை, 1983ல் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒரே நாளில், ஏப்ரலில் தேர்வு நடத்தப்பட்டது. இது குறித்து, சரியான அறிவிப்புகளை வெளியிடாததால், மிக குறைந்த மாணவர்களே தேர்வு எழுதி உள்ளனர். பி.ஆர்க்., படிப்பில் சேர்வது எப்படி என, தவிப்பில் உள்ளனர். எனவே, கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய விதிகளை, 20 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, நெருக்கடி தரப்பட்டுள்ளது. 
குறைவான அவகாசத்தில், கல்லுாரிகளின் பரப்பளவை அதிகரிக்க, கூடுதல் நிலம் தேடுவதும், கூடுதல் ஆசிரியர்களை தேர்வு செய்வதும் முடியாத காரியம். எனவே, முந்தைய ஆண்டு பின்பற்றிய விதிகளையே, இந்த ஆண்டும் தொடர, அண்ணா பல்கலையும், ஆர்க்கிடெக் கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவுன்சில் சொல்வது என்ன? : இது குறித்து, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில் பதிவாளர், ஆர்.கே.ஓபராய் கூறுகையில், ''பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, ஏற்கனவே தெரிவித்துள்ளோம்; அதிகாரப்பூர்வ கடிதங்களும் அனுப்பி உள்ளோம். கல்லுாரிகள் எங்களை முறைப்படி அணுகினால், அவர்களின் வேண்டுகோளை பரிசீலிக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.