காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
காலாவதியாகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்.
மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம். மேலும் தொடக்கப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ளலாம். 2016 ஆக., 1 கணக்கெடுப்பின்படி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (மே 24) பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.
கடந்த காலங்களில் 5 மாணவர்கள் குறைந்தால் கூட உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். இந்த ஆண்டு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு நடப்பதால் ஒரு மாணவர் குறைந்தால் கூட, உபரி ஆசிரியரை பணிநிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால், அப்பணியிடங்கள் அனைத்தும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில் ஆயிரம் பணியிடங்கள் காலாவதியாவதால், புதிய பணி வாய்ப்பு குறையும். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,' என்றார்.