'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்

ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார். 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'ரேங்க்' முறையை கைவிடுவதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், கடுமையாக கஷ்டப்பட்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பலரும், பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவியர் விரக்தி : மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பதக்கம், பாராட்டு என, எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ளனர். 
இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த மாணவ, மாணவியரின் போட்டோக்கள் மற்றும் மதிப்பெண்களுடன், 'பிளக்ஸ்' பேனர்களிலும், நாளிதழ்களிலும் பள்ளி நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்துள்ளன.இதற்கும் தடை விதிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இத்தகைய விளம்பரங்கள் வெளியிடக்கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளம்பரங்கள் வெளியிட்ட பள்ளி நிர்வாகங்களை மிரட்டும் வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது.
இனிமேல், இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என, பள்ளி நிர்வாகங்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. 
பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. துறை மேலிடத்தின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கையாள்வதாக பள்ளி நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். இதுபற்றி, தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர். 
ஆரோக்கியமற்ற போட்டி : இந்த குளறுபடிகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளுக்கு இடையில், ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவானதைத் தடுக்கவே, 'ரேங்க்' முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, முதலிடம் என்று எந்த மாணவரின் போட்டோ மற்றும் மதிப்பெண்ணைப் போட்டு, விளம்பரம் செய்யக்கூடாது; 
அதேபோன்று, 'சென்டம்' எடுத்த மாணவர் என்றும், யாருடைய போட்டோவையும் வெளியிடக்கூடாது.ஆனால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, போட்டோக்களுடன் விளம்பரங்கள் வெளியிடலாம்.
தங்களது பள்ளியில், 450க்கு மேல் அல்லது 1,100க்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை, வெவ்வேறு பாடங்களில் 'சென்டம்' எடுத்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை விளம்பரங்களில் குறிப்பிடலாம். 
நடப்பாண்டில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமின்றி, கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் போட்டோக்களையும் வெளியிடக்கூடாது.
மற்றபடி, பள்ளிகளின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு, எந்தத் தடையும் இல்லை; இது குறித்து, தெளிவான விளக்கத்துடன் துறை அலுவலர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு, பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
துறை செயலரின் இந்த விளக்கம், பள்ளி நிர்வாகங்களை மிரட்டிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு போதுமானதாக இருக்குமா அல்லது மறு உத்தரவு வரும் வரை, இது போன்ற மிரட்டல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.