பிற மாநில மாணவர்களுக்கு தனி விதி இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மாற்றம்

இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், வெளி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு, தனி விதிகள் கொண்டு வருவது குறித்து, உயர் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

அரசு ஒதுக்கீட்டில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., இன்ஜி., படிப்புக்கு அண்ணா பல்கலை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் மூலமாக கவுன்சிலிங் நடக்கும். 



இதில் பங்கேற்க, தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 2016ல், இன்ஜி., படிப்பிலும், மருத்துவ படிப்பிலும், ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர், தரவரிசையில் முன்னிலை பெற்றனர்.
அவர்கள், ஆந்திரா மற்றும் கேரள எல்லையை ஒட்டிய, தமிழக பகுதிகளில் வசித்ததால், தமிழகத்தில் இட ஒதுக்கீடு கிடைத்தது. அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், 10ம் வகுப்புக்கு பின், கேரளா, ஆந்திராவுக்கு சென்று, அங்கே பிளஸ் 2 படித்து, அதிக மதிப்பெண் பெறுகின்றனர். பின், தமிழகத்தில் படித்த மாணவர்களை பின்னுக்கு தள்ளி, கவுன்சிலிங்கில் இடங்களை பெற்று விடுகின்றனர்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:

தமிழக பாடத்திட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா பாடத்திட்டத்திற்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, தமிழகத்தில் படித்த மாணவர்களையும், வெளி மாநிலத்தில் படித்த மாணவர்களையும், ஒரே தரவரிசையில் பட்டியலிடக் கூடாது. 
தமிழக அரசின் தேர்வுத் துறை போல, மற்ற மாநிலங்களில் மிகவும் கண்டிப்புடன் தேர்வு நடத்துவதோ, திருத்துவதோ கிடையாது. அதனால், பிற மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள், தமிழகத்தில் படிப்போரை விட, அதிக மதிப்பெண் பெறுகின்றனர். 
வெளி மாநிலத்தில் படிக்க, பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பதால், ஏழை மாணவர்கள், தமிழகத்தில் மட்டுமே படிக்க முடிகிறது. 
எனவே, தமிழக பாடத் திட்டத்தை நம்பி படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் பின்னுக்கு தள்ளப்படாமல், அரசு காப்பாற்ற வேண்டும். அதற்கு, வெளி மாநிலத்தில் படிப்போருக்கு, கவுன்சிலிங்கில், தனி விதிகள் கொண்டு வர வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையில், வெளி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் தனியாக விதிகள் கொண்டு வர, உயர்கல்வித் துறையும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கவுன்சிலிங் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.