இன்ஜினியரிங் தேர்வில் மாற்றம் : ஏ.ஐ.சி.டி.இ., திட்டம்

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களின் தனித்திறனை சோதிக்கும் வகையில் தேர்வுகள் நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்களில் பலர், வேலையின்றி தவிக்கின்றனர். ஆனால், பல தொழில்
நிறுவனங்களில் திறமையான இன்ஜினியர்கள் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., குழு தீவிரமாக விவாதித்தது.அதன் முடிவில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தேர்வு, பாடத்திட்டம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், பல்கலையும், ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற, பாடத்திட்டம் கொண்டு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.அதேபோல், இன்ஜினியரிங் தேர்வுகளில், வெறும் பாடங்களை பற்றி மட்டும் கேள்விகள் இடம் பெறாமல், மாணவர்களின் தனித்திறன் சோதனை, படித்த பாடம் மூலம் பிரச்னைகளை தீர்க்கும் திறமை குறித்து, கேள்விகள் இடம் பெற உள்ளன. இதற்கான மாதிரி தேர்வுத்தாளை, ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்க உள்ளது.