எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் 571 இடங்களில் வழிகாட்டி முகாம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 படித்துவிட்டு தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டி முகாம்கள் 571 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த முகாம்கள் மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் ஏப்ரல் 6–ந் தேதி நடத்தப்படுகிறது. அனைத்து ஒன்றியங்களிலும் ஏப்ரல் 7–ந் தேதி முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாம்களில் அந்த பகுதியில் உள்ள மாணவ–மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனை நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடத்தப்பட்டது. வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி மற்றும் பலர் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். மேலும் இணையதளத்திலும் அதை (www.tnscert.org) வெளியிட்டார். கையேட்டின் முதல் பிரதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன தலைவர் பா.வளர்மதி பெற்றுக்கொண்டார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–
ஏப்ரல் 6 மற்றும் 7–ந் தேதிகளில் நடக்கும் வழிகாட்டும் முகாம்களில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் அடையவேண்டும். இந்த அரசு நேர்மையான முறையில், வெளிப்படையான முறையில் நடக்கிறது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டும் போதாது.
அவர்களுக்கு வேலைவாய்ப்பும் தேவைப்படுகிறது. அதற்கான உயர் கல்வியை தேர்வு செய்ய இந்த வழிகாட்டும் முகாமில் மாணவர்களும், மாணவிகளும் கலந்துகொள்ள வேண்டும். எப்படியும் 15 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து குறைகளும் களையப்படும். வருகிற 6 மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும்.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் ரெ.இளங்கோவன், க.அறிவொளி, ச.கண்ணப்பன், கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும். போதிய ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டுக்குள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.