பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் -பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சுற்றறிக்கை
போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:–
விழிப்புணர்வு
பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் வாரம் இருமுறையாவது மாணவ–மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும். அப்போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்துங்கள்.மேலும் இதுகுறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுக்க வைக்க வேண்டும். குறைந்தது 2 நிமிடங்கள் இதற்காக ஒதுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும் மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியையும் அவர் கூறியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
போக்குவரத்து விதிகள்
நான் போக்குவரத்து விதிகளை மதிப்பேன். நன்றாக பழகியபிறகே வாகனம் ஓட்டுவேன். டிரைவிங் லைசென்சு பெற்றபிறகே வாகனம் ஓட்டுவேன். என் பெற்றோர் வாகனம் ஓட்டும்போது இருசக்கர வாகனமாக இருந்தால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவேன். பெற்றோர் கார் ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவேன்.நான் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த மாட்டேன். வாகனம் ஓட்டும்போது எனது பெற்றோரையும் செல்போன் பயன்படுத்த விட மாட்டேன்.பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன். அசதியாக இருக்கும்போது வாகனம் ஓட்ட மாட்டேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.