'நீட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு : நான்கு லட்சம் பேர் தேர்ச்சி

மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
       அகில இந்திய அளவில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில் சேர, நீட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இத்தேர்வு, மே, 1ல் நடந்தது. மாநில அரசின் கல்லுாரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலும் நீட் தேர்வு நடத்தி, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் உட்பட, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதனால், சில மாநில அரசுகளின் கல்லுாரிகளுக்கு மட்டும் இந்த ஆண்டு நீட் தேர்வில் விலக்கு அளித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. தனியார் மருத்துவக் கல்லுாரி சேர்க்கைக்கு, நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. எனவே, ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட நீட் தேர்வு நடந்தது. இரண்டு கட்ட தேர்வின் முடிவுகளை, சி.பி.எஸ்.இ., இணை செயலர் சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்:
* நாடு முழுவதும், 52 நகரங்களில், 1,040 மையங்களில் முதற்கட்டமாகவும், 56 நகரங்களில், 739 மையங்களில் இரண்டாம் கட்டமாகவும் தேர்வு நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்த எட்டு லட்சம் பேரில், 3.37 லட்சம் மாணவர்கள், 3.93 லட்சம் மாணவியர் என, 7.31 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
* இவர்களில், மத்திய அரசின், 15 சதவீத இட ஒதுக்கீட்டில், அரசு கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 11 ஆயிரத்து, 58 மாணவர்கள், 8,266 மாணவியர் மற்றும் ஒரு திருநங்கை என, 19 ஆயிரத்து, 325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
* தேர்வில், 1.83 லட்சம் மாணவர்கள், 2.26 லட்சம் மாணவியர் மற்றும் நான்கு திருநங்கையர் என, 4.09 லட்சம் பேர், குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்
* தேர்வில், 720 மதிப்பெண்களில், பொதுப் பிரிவினருக்கு, 50 சதவீதமும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு, 45 சதவீதமும், மற்ற அனைத்து பிரிவினருக்கும், 40 சதவீதமும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் பெற்றவர்கள், தனியார் கல்லுாரிகளில் சேர முடியும்.
26 பேர் தேர்வு எழுத தடை : நீட் தேர்வில், கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட நீட் தேர்வை எழுதியோர், முதற்கட்ட தேர்வு எண்ணை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிபந்தனைகளை மீறிய, 26 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. மேலும், சி.பி.எஸ்.இ.,யின் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாணவர் முதலிடம் : 'நீட்' தேர்வில், மொத்தம், 720 மதிப்பெண்களில், 685 மதிப்பெண் பெற்று, குஜராத்தைச் சேர்ந்த, ஹேட் சஞ்சய் ஷா என்ற மாணவர், நாட்டிலேயே முதல் இடம் பெற்றுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த ஏகன்ஷ் கோயல், 682 மதிப்பெண்ணுடன், இரண்டாம்
இடத்தையும், ராஜஸ்தானைச் சேர்ந்த நிகில் பஜியா, 678 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.முதலிடம் பிடித்துள்ள ஹேட் சஞ்சய் ஷா, மத்திய அரசின், 'எய்ம்ஸ்' மருத்துவ நுழைவுத்தேர்வில், அகில இந்திய அளவில் நான்காம் இடமும், ஏகன்ஷ் கோயல் ஒன்பதாம் இடமும், நிகில் பஜியா இரண்டாம் இடமும் பெற்றவர்கள்.