அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு அதிரடி முடிவு!

அடுத்த ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் கிடையாது என்றும், பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் கடந்த 1924-ஆம் ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. அது தொடங்கி,ஆண்டு தோறும் பொது பட்ஜெட்டுக்கு முன்னதாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற வழக்கம் தொடர்ந்து வந்தது.
கடந்த பாஜக ஆட்சியின் போதே ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை.
பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழுவை மத்திய நிதியமைச்சகம் நியமித்தது. இந்தக் குழு அண்மையில் அளித்த அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதனை மத்திய நிதியமைச்சகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படும். தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:
 மத்திய ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப்பதன் மூலம் தேசிய அளவிலான ரயில் போக்குவரத்துக்கு நீண்ட கால பலன்கள் கிடைக்கும். இதன் மூலம் இதர அரசு துறைகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப் படுவது போல ஒதுக்கீடுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.