வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு ஆன்-லைனில் இனி விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில், வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற விண்ணப்பம் சமர்ப்பித்தல், ஒதுக்கீடு செய்தல், வீடு-குடியிருப்புகளை ஒப்படைப்பு செய்தல், ஒதுக்கீடு பெற்றதற்கான தொகை, மாத தவணைத் தொகை, வாடகைத் தொகையை வசூலிப்பது ஆகியன ஆன்-லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.

வாரியத்தின் அனைத்துத் திட்டங்களும், தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும், தவணைத் தொகை, வாடகை வசூல் ஆகியவற்றை தினந்தோறும் கண்காணிக்கவும், அவற்றில் தவறு ஏதும் ஏற்பட்டால் அதனைச் சரிசெய்யவும் வழிவகை செய்யப்படும்.
இலகுரக கடன்கள்:
10 முதன்மை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் வாயிலாக கண்டறிந்து அந்தச் சங்கங்களின் வணிகச் செயல்பாட்டினைப் புதுப்பித்து சாத்தியமிக்க சங்கங்களாக உருவாக்கும். இதற்காக சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.30 லட்சம் இலகுரக கடன் வழங்கப்படும்.
அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பணியாளர்களுக்கான கட்டணத்தை கூட்டுறவு வீட்டுவசதி இணையமும், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களும் ஏற்றுக் கொள்ளும்.
கடன்-வசூலிப்புப் பணி: தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளிக்கப்படும் கடன் பட்டுவாடா, கடன் வசூலித்தல் பணிகள்,
அன்றாட கணக்குகள் ஆகியன ஆன்-லைன் மூலமாக கணினிமயமாக்கப்படும். சங்கத்துக்கு அடமானம் செய்துள்ள கடன்தாரர்களின் அனைத்துச் சொத்துகளின் அமைவிடம் குறித்து புவிசார் குறியீட்டின்படி சேகரிக்கப்பட்டு, கடன்தாரர்கள் தங்களது கடனை நேரடியாக ஆன்-லைன் வசதி மூலமாகவோ அல்லது வங்கிக் கிளையிலோ திருப்பிச் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதனால் கடன் வழங்குவது, திருப்பிச் செலுத்துவதை முறைப்படுத்துவதுடன், திருப்பிச் செலுத்தாத கடன்தாரர்கள், முறையாக பராமரிக்கப்படாத கணக்குகள் ஆகியவற்றைத் தினமும் கண்காணித்து கடன்கள் தவறாமல் திருப்பி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், குடியிருக்கத் தகுதியுள்ள நிலையில் பராமரிக்கப்படும். அதன்படி, நிகழாண்டில் ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைகக் குடியிருப்புகளில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சி.எம்.டி.ஏ. ஆவணங்களையும் கணினி வழியில் பிரதி எடுக்கலாம்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திலுள்ள (சி.எம்.டி.ஏ.) வரைபடம், ஆவணங்களை கணினி வழியாக பிரதி எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடம், ஆவணங்கள் குறுகிய ஆயுளை உடையதாலும், கரையான், பூச்சிகளால் சேதம் அடையும் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது அவசியம். எனவே, அவற்றின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றை கணினி வழிப் பிரதியெடுக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். சட்டச் சிக்கல்களில் தீர்வு காணவும், கட்டி முடிக்கப்படும் கட்டடங்கள் திட்ட அனுமதியின்படியே கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், வருங்காலங்களில் பொது மக்கள் வேண்டும் போது அவற்றின் பிரதிகளை எளிதாக வழங்கவும் அவசியமாகிறது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் முக்கியமான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளதால் அவற்றை கணினி வழிப் பிரதி எடுத்தல் முக்கியம். இவ்வாறு கணினிமயமாக்கப்படும் தகவல் தொகுப்பு எதிர்காலத் திட்டமிடுதலுக்கும் பயன்தரும். இந்தத் திட்டத்துக்கான செலவினம், திட்ட அனுமதி வரைபட நகல், பிற ஆவணங்களைப் பெறும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் வழியாக பெறப்படும்.
மூன்று வணிக வளாகங்கள்: சென்னையில் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், அசோக் நகர் ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகக் கட்டடங்களை இடித்து விட்டு அதிகபட்ச தரைப்பரப்பு, நவீன வசதிகளுடன் கூடிய வணிக-அலுவலகக் குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும் என்றார்.