தகுதியானோர் பட்டியல் வெளியிடாமல் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

வரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கு முன்பே ஒவ்வொரு பாடத்திலும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்.
அதில் ஆட்சேபனை இருந்தால் பட்டியல் சரி செய்யப்படும். ஆக., 22 ல் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் நடப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் வரலாறு பாடத்திற்கான சீனியாரிட்டி பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'வரலாறு பாடத்தில் சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பட்டியலை வெளியிட கல்வித்துறை மறுத்து வருகிறது,' என்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை இயக்குனரகத்திற்கு அனுப்பி விட்டோம். இயக்குனரகம் தான் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்,' என்றார்.