விடுமுறை கால சிறப்பு வகுப்பு கூடாது!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்,குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது,என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி,கலெக்டர் மற்றும் தமிழக
அரசுக்கும்,தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.அக்கடிதத்தில்,நல்லசாமி கூறியிருப்பதாவது:


கறிக்கோழிகளை வளர்த்து பண்ணைக்கு அனுப்புவது போல,இந்தியாவில் பள்ளி,கல்லூரிகள் குழந்தைகளை படிக்க செய்து,வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. மூன்று வயதிலேயே உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்ப்பது,இன்றைய நாகரீகமாக உள்ளது. கோடை விடுமுறையில் கூட,வீட்டில் குழந்தைகளை இருக்க விடுவதில்லை. இதனால்,பல விவசாய குடும்பத்து குழந்தைகளுக்கு கூட காடு,விளை நிலம்,ஆடு,மாடு போன்ற கால்நடை வளர்ப்பு போன்றவை அறிய வாய்ப்பின்றிபோகிறது. இங்கிலாந்தில்,உலக போர்களுக்கு முன்பு வரை,அறுவடை காலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம். இதனால்,இளமையிலேயே குழந்தைகள் விவசாயத்தை கற்றனர். பெற்றோருக்கு சுமை தாங்கியாக இல்லாமல் போனார்கள்.உலக போருக்குப்பின்,இந்நடைமுறை எல்லா இடங்களிலும் மாறிவிட்டது. புற்றீசல் போல கோடை விடுமுறை பயிற்சி களங்கள்,சிறப்பு வகுப்புகள்,விளையாட்டு பயிற்சி கூடங்கள் என அதிகரித்து விட்டன. இதனால்,குழந்தைகளின் ஓய்வு தேவையும் பாழாகிவிடுகிறது.எனவே,நமது மரபை காக்கவும்,குழந்தைகளின் ஆரோக்கியம் கருதியும்,இதுபோன்ற கோடை விடுமுறை பயிற்சிகளை தடை செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.