இன்ஜி., விண்ணப்ப பதிவு இணையதளம் முடங்கியது

அண்ணா பல்கலையில், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட, இன்ஜி., 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், முதல் நாளிலேயே குளறுபடி ஏற்பட்டுள்ளது. இணையதளம் முடங்கியதால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலை மூலம், தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு முதல் விண்ணப்பம் வழங்கும் முறை, ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, ஆன்லைனிலேயே பதிவு செய்து, அதை பிரதி எடுத்து அண்ணா பல்கலையில், தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலருக்கு அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, நேற்று முன்தினம் வெளியானது. நேற்று முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி, மாணவர்கள், நேற்று காலை முதல், இணையதளத்தில் பதிவு செய்ய முயன்றனர். ஆனால், இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளம் செயல்படவில்லை. தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் இணையதள பதிவுக்கு முயற்சித்து கொண்டே இருந்தனர். ஆனால், மாலை, 6:00 மணிக்கு பின், இணையதளம் செயல்பட்டது.நுாற்றுக்கணக்கான மாணவர்கள், அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பம் வாங்க முயன்றனர். ஆனால், 'நேரில் விண்ணப்பம் வழங்கப்படாது' எனக்கூறி, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று குளறுபடி ஏற்பட்டது' என்றனர்.
எம்.பி.பி.எஸ்.,க்கு எப்போது?இன்ஜி., படிப்புகளுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. பொதுவாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு கலந்தாய்வு முடிந்த பின், இன்ஜி., படிப்பு கலந்தாய்வு துவங்கும்.
மருத்துவ படிப்பு விண்ணப்ப வினியோகம் குறித்து, முறையான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என, மருத்துவ படிப்பில் சேர ஆர்வமுடன் உள்ள மாணவர்கள் கேள்வி எழுப்பி 
உள்ளனர்.இது குறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்ப வினியோகம் குறித்த விவரம், ஓரிரு நாளில் வெளியாகும்' என்றனர்.