தமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி:விரைவில் 'ஆன்லைன்' தேர்வு நடத்த திட்டம்

தமிழக பல்கலைகளில் முதல்முறையாக, 'ஆன்லைன்' தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் அறிவித்துள்ளார்.

சென்னை, வியாசர்பாடியில் உள்ள அரசு அம்பேத்கர் கலை கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கல்லுாரி முதல்வர் சந்திரா தலைமையில், நேற்று நடந்தது. இதில், சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பேராசிரியர் எஸ்.திருமகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 413 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

விழாவில், திருமகன் பேசியதாவது:தொழில் நுட்ப முன்னேற்றம், கல்வியில் தற்போதைய தேவை ஆகியவற்றை கருதி, தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
அதன்படி, சென்னை பல்கலையில், 'ஆன் லைன்' தேர்வு முறை அறிமுகம் ஆக உள்ளது. பல்கலையின் சட்டப்பூர்வ அமைப்புகளான, 'செனட்' மற்றும்,'சிண்டிகேட்'டின் அனுமதியை பெற்ற பின், 'ஆன்லைன்' தேர்வு முறை அமலாகும்.

'அப்ஜெக்டிவ்' முறை:இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், கணினியில் தான் தேர்வை எழுத வேண்டும். முதல் கட்டமாக, 40 சதவீத பாடம், 'அப்ஜெக்டிவ்' முறைப்படி, கணினி வழி தேர்வாக நடக்கும். மாணவர்கள் தேர்வு முழுவதையும் அதற்கு ஒதுக்கப்பட்ட சரியான நேரத்தில் தான் முடிக்க முடியும். தேர்வு முடிந்து, விடைத்தாளை, 'ஓகே' செய்தவுடன், மதிப்பெண்ணையும் உடனடியாக கணினியில் பார்த்து விடலாம். எனவே, மதிப்பெண்ணை தெரிந்து கொண்டு தான், தேர்வு அறையில் இருந்து மாணவர் வெளியே வருவர்.

மொத்தம், 150 கேள்விகள், 'ஆன்லைன்' தேர்வில் இடம் பெறும். கூடுதல் தேர்வு கட்டணம் எதுவும் இருக்காது. மிக குறைந்த கட்டணத்தில், இந்த வசதியை ஏற்படுத்தி தர, முன்னணி யில் உள்ள பிரபல கணினி மென்பொருள் நிறுவனத்துடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப புரட்சிஇந்த தேர்வால், மதிப்பெண் சரியாக வழங்கினாரா; சரியாக திருத்தினாரா என்ற குழப்பம் மாணவர்களுக்கு தேவையில்லை; மறுமதிப்பீடு கேட்க வேண்டிய அவசியம் இல்லை; வினாத்தாள் முறைகேடாக வெளியாகுமா என்ற பிரச்னைக்கும் இடமில்லை.
எனவே, தொழில்நுட்ப புரட்சிக்கு மாணவர்கள் இப்போதே தயாராகி விடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.