ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ள வசதி

ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

             ரயில் பெட்டிகளில் இருக்கை ஒதுக்கீட்டில் ஆண் பயணிகள் மத்தியில் பெண் பயணி ஒருவர் மட்டும் தனியாக பயணம் செய்யும்போது, பாதுகாப்பற்ற சூழலை அவர் உணரவேண்டிய நிலை ஏற்படும். இதை நிவர்த்திச் செய்யும் பொருட்டு பெண் பயணிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த தெற்கு ரயில்வே சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, ரயில்களில் தனியாகச் செல்லும் பெண் பயணிகளின் உதவிக்காக பிரத்யேகமாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்களில் தனியாக செல்லும் பெண் பயணிகள், உதவி தேவைப்பட்டால் உதவி வணிக மேலாளர் அமுதா என்ற அதிகாரியை 9003160980 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 சம்பந்தப்பட்ட பெண் பயணிகளின் குறைபாடுகளைக் களைந்து, அவருடைய இருக்கை மற்றும் படுக்கையை வேறு இடத்திற்கு மாற்றி சுமுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 புகார் தெரிவிப்பதற்கு உரிய சூழல் மற்றும் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர் தன்னுடைய பெயர் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும். பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர பெண் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளுக்கு பிரத்யேக உதவி எண் 182 வசதி உள்ளது. இதனை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.