வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிது கால்நடை மருத்துவ 'கட் ஆப்' உயரும்:

     வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிதாக இருந்ததால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் உயர வாய்ப்புள்ளது.
        பிளஸ் 2 தேர்வில், நேற்று, 'இண்டஸ்ட்ரியல் இன்ஜி.,' வேளாண் செயல்முறைகள் உட்பட, 12 தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன. வேளாண் செயல்முறைகள் தேர்வில் மிகவும் எளிமையான வினாக்களே இடம் பெற்றன.
கடந்த ஆண்டில், சில வினாக்கள் மாணவர்களை குழப்பும் விதமாக இருந்தன. ஆனால், இந்த முறை எந்த பிரச்னையுமின்றி, மிக எளிமையான வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் அக்ரி மாதவன் கூறுகையில், ''இந்த ஆண்டு வேளாண் செயல்முறைகள் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதுடன், 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்,'' என்றார்.
வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிதாக இருந்ததால், பி.எஸ்சி., அக்ரி படிப்பு, கால்நடை மருத்துவப் படிப்புக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு நடந்த விலங்கியல் தேர்வும் எளிதாக இருந்ததால், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும், அதிக அளவில், 'சென்டம்' பெற்று, கால்நடை மருத்துவத்துக்கு விண்ணப்பிப்பர். எனவே, இந்த முறை கால்நடை மருத்துவத்துக்கு கடும் போட்டி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.