பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்

தொழிற்சாலையில் பொருட்களை தயாரிப்பது போல இந்தியாவில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் கல்வி முறை சரியாக இல்லை. தொழிற்சாலையில் பொருட்கள் தயாரிப்பதில் எப்படி அணுகுமுறை இருக்குமோ அதைப் போல் மாணவர்களிடம் பள்ளிகளின் அணுகுமுறை உள்ளது. நேரடியாக ஆய்வகங்களில் சோதனையில் பங்குபெறும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார்.
சமீபகாலங்களாக இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால் ஆராய்ச்சிப் பணிகளில் ஒன்றுமே மேற்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழக அளவில் இருந்தே ஆராய்ச்சிகள் ஆரம்பமாக வேண்டும். ஆனால், இங்கு பிஎச்.டி யை பெறவே 5 ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் கூட முறையான வேலை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதன்காரணமாக, ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் சம்பளம் அதிகம் கிடைக்கும் மற்ற வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். சீனா நம்மை விட ஆராய்ச்சியில் முந்தி சென்றுவிட்டது. அங்கு பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றன. மாணவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.அவர் தெரிவித்தார்.