கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து மாவட்டஅறிவியல் அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கணித மேதை ராமானுஜரின் பிறந்த தினமான டிசம்பர் 22-
ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில்கணித நாளை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் கணித திறனறிவுத் தேர்வில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.அடிப்படை கணிதத்தை மையமாகக் கொண்டு கூர்ந்து கவனித்து திறனறிதல்,சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மிக மிக நன்று பிரிவில் ரூ.2,000 மதிப்பிலான பரிசும், மிக நன்று பிரிவில் ரூ.1,000 மதிப்பிலான இரு பரிசுகள், நன்று பிரிவில் ரூ.500 மதிப்பிலான 3 பரிசுகள், சிறப்பு பிரிவில் ரூ.250 மதிப்பில் 20 பரிசுகள் வழங்கப்படுகிறது.காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 18-ஆம் தேதிக்குள் பெயருடன் ரூ.100ஐ செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர் 0416- 2253297, 2252297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.