வீட்டுக்கடன் வாஙும் முன் திட்டமிடுங்கள்

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் அஸ்திரமாக வங்கிக்கடன்கள் இருப்பதால் அதுவே பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கிறது. அத்துடன் வீட்டுக்கடனுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், வீடு
வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் சாதகமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. எனினும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால்தான் விரைவாக வீட்டுக்கடனை முடிக்க வேண்டும்.
சேமிப்பு தொகை
குறிப்பாக நம்முடைய பட்ஜெட் தொகை எவ்வளவு? அதில் வங்கிக்கடனாக எவ்வளவு தொகையை வாங்கப்போகிறோம்? அதனை எப்படி திரும்ப செலுத்த போகிறோம்? என்பது குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நாம் எதிர்பார்க்கும் தொகை முழுவதையும் வீட்டுக்கடனாக பெற்றுவிட முடியாது.
நம்முடைய வருமானத்தை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்பதான் வீட்டுக்கடன் தொகை நிர்ணயிக்கப்படும். அத்துடன் சொத்து மதிப்பில் 80 சதவீதம்தான் கடனாக கிடைக்கும். மீதம் இருக்கும் 20 சதவீதத்தை முன்தொகையாக (மார்ஜின் மணி) உடனடியாக செலுத்த வேண்டியிருக்கும். அந்த தொகை நம்முடைய சேமிப்பு தொகையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த தொகைக்கும் கடன் வாங்க நினைப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
வட்டி விகிதம்
ஏனெனில் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு அதை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணை தொகை (.எம்.), குடும்ப மாத செலவீனங்கள் உள்ளிட்டவை மாத வருமானத்தை ஆக்கிரமித்துவிடும். அப்படியிருக்கையில் வீட்டு கடனுக்கான முன்பண தொகையையும் கடனாக பெற நேர்ந்தால் மேலும் பண நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் வீட்டுக்கடனுக்கான வட்டியை விட இத்தகைய கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.
பெரும்பாலானோர் தனிநபர் கடன், நகைக்கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றின் மூலம் முன்பணம் செலுத்துவதற்கான கடனை பெறுவதற்கு முயற்சிப்பார்கள். இந்த கடன்களின் வட்டி விகிதம் வாங்கும் அசல் தொகைக்கு பாதிக்கு மேல் வட்டித்தொகையாக அமைந்திருக்கும்.
வரிச்சலுகை
இக்கடன்களை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டியிருக்கும் என்பதால் மாதந்தோறும் தவணை தொகையும் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே வீட்டுக்கடனுக்கு மாதத்தவணை செலுத்தும் நிலையில் இதற்கும் சேர்த்து கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது குடும்பத்தின் நிதி ஆதாரத்தை பாதித்துவிடக்கூடும். திடீரென்று அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக ஏற்கனவே கடன் வாங்கி இருக்கும்போது புதிதாக கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
அதையும் எதிர்கொண்டு கடன் பெறும் பட்சத்தில் மூன்று வகையான கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படும். இதுதவிர இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்கியிருக்கும் வீட்டுக்கடனுக்கு மட்டும்தான் வரிச்சலுகை பெற முடியும். வீட்டுக்கடனுக்கான முன்தொகையை செலுத்துவதற்காக வாங்கும் தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன் இனங்களுக்கு வருமான வரி விலக்கு சலுகையை பெற முடியாது.
விரைவாக முடிக்க திட்டமிடல்
சொந்த வீடு வாங்குவதற்கு முடிவு செய்துவிட்டாலே இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சேமிக்க தொடங்க வேண்டும். அந்த சேமிப்பு தொகையின் மூலம் முன் பண தொகையை திரட்டுவதற்கு திட்டமிட வேண்டும். அத்துடன் வேறு ஏதேனும் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு வேறு ஏதேனும் கடன் வாங்கி இருந்தால் அதற்கேற்ப வீட்டுக்கடன் தொகை குறையும்.

ஏற்கனவே உங்கள் வருமானத்தின் அடிப்படையில்தான் கடன் கிடைக்கும் பட்சத்தில் இந்த இதர கடனும் உங்கள் சொந்த வீட்டு கடன் தொகையை குறைத்துவிடும் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதேபோல் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு மாதத்தவணை தொகையை சரிவர செலுத்தி வர வேண்டும் என்பதுடன், விரைவாக கடனை முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். கடன் கால அளவை குறைப்பதன் மூலம் வீட்டுக்கடனுக்கான வட்டி தொகையில் கணிசமாக சேமிக்கலாம். வீட்டுக்கடனும் விரைவாக முடிந்துவிடும். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.