சம்பள பாக்கியை கேட்டதால்கல்வித்துறை 'மிரட்டல்' உத்தரவு

தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 59 கல்லுாரிகளில் மாலை நேர, இரண்டாவது பிரிவு வகுப்புகள் செயல்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு, 2006 - 07ம் கல்வியாண்டில், 1,661
முதுகலை பட்டதாரிகள், கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஊதியம். வாரத்துக்கு, 16 மணி நேரம் வேலை. மாலை நேர வகுப்பில் பாடம் எடுக்க வேண்டும். இவர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக, சம்பளம் வழங்கவில்லை. நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்கவும், சம்பள தொகையை உயர்த்தவும், பணி நிரந்தரம் வழங்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர் களுக்கு அதிர்ச்சி அளிக்கும் புதிய உத்தரவை, தமிழக உயர்கல்வித் துறை பிறப்பித்துள்ளது. கல்லுாரி கல்வி இயக்குனர் தேவதாஸ் பிறப்பித்து உள்ள அந்த உத்தரவு:
மாலை நேர வகுப்புகளில், கவுரவ பேராசிரியர் இடங்களில், நிரந்தர பணியிலுள்ள ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றலாம். அவர்களுக்கு, கவுரவ பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் அதே, 10 ஆயிரம் ரூபாய், கூடுதலாக வழங்கப்படும்.இவ்வாறு அந்த உத்தர வில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு, அரசு கல்லுாரி ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து ள்ளனர்.
நிரந்தர பேராசிரியர்களுக்கு இரட்டிப்பு பணி கொடுத்து, கவுரவ பேராசிரியர்களை படிப்படியாக நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து. கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன் கூறியதாவது:
முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பு முடித்து, இளைஞர்கள் பலர், வேலையின்றி காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க, அரசு முன்வர வேண்டும்.
மாறாக, இருக்கும் ஆசிரியர்களை மிரட்டும் விதமாக, உத்தரவு பிறப்பிக்கக் கூடாது.
இந்த உத்தரவின் மூலம், கவுரவ பேராசிரியர் இடங்களை மறைமுகமாக நீக்கி, எதிர்காலத்தில் மாலை நேர கல்லுாரிகளையே மூடும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்