வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாக மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்வுக்கான 'வினாத்தாள் கட்டணம்' என்ற வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர். 6 - 8ம் வகுப்பு வரை, 35 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 45 ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 55 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.
இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், சில குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை பள்ளியில் கொடுத்து, அந்த கணக்கில், மாணவர்களிடம் வசூலித்த பணத்தை செலுத்துமாறு, வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக, பள்ளி ஆசிரியர் சிலர் தெரிவித்தனர். இந்தக் கட்டணத்துக்கு பள்ளி சார்பிலோ, பள்ளிக்கல்வி துறை சார்பிலோ ரசீது வழங்கப்படுவதில்லை.

இதுகுறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது:ஏற்கனவே, மாணவர் சேர்க்கையின் போது, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் மூலம், கட்டாய வசூல் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்னையை பள்ளிக்கல்வி இயக்குனரிடம் கொண்டு சென்ற போது, 'வசூல் செய்ய கூடாது' என, சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், அதையும் மீறி பள்ளிகளில் வசூல் செய்ததை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போதும், அதிகாரப்பூர்வ உத்தரவு இன்றி, கட்டாய வசூல் நடத்தப்படுகிறது. அதேநேரம், கட்டணம் வாங்கிய பிறகும், மாணவர்களுக்கு வினாத்தாள் அச்சடித்து தருவதில்லை. மாறாக ஒரு வினாத்தாளை கொடுத்து, அதை ஜெராக்ஸ் எடுக்கச் சொல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.