கண்ணீர்... கண்ணீர்...: பிறந்த மண்ணில் 'மக்கள் ஜனாதிபதி' கலாமுக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உடல் நேற்று மதியம் 3.50 மணிக்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கீழக்காடு மைதானத்தில் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் மல்க நீண்ட வரிசை யில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். பலர் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.

மதுரையிலிருந்து அப்துல் கலாம் உடல் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் ஹெலிபேடிற்கு மதியம் 2:25க்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படையை சேர்ந்த அதிகாரிகள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ஆர்.பி.உதயகுமார், சுந்தர் ராஜ், கலெக்டர் நந்தகுமார், எஸ்.பி.மயில்வாகனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் 18 கி.மீ., தூரமுள்ள ராமேஸ்வரத்திற்கு மதியம் 3:௫௦க்கு கொண்டு வரப்பட்டது. உடலுடன்அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் உதவி யாளர்கள் உடன் வந்தனர்.


மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் ஏராளமானோர் திரண்டு அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர். மாணவ, மாணவியர், இளைஞர்கள் தரையில் விழுந்து வணங்கினர். இதனால் அவரது உடல் எடுத்து வந்த வாகனம் மெல்ல ஊர்ந்தபடி வந்தது. மேகலாயா கவர்னர் சண்முகநாதன், மத்தியஅமைச்சர்கள் வெங்கய்யாநாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள் பன்னீர்செல்வம்

உள்ளிட்டோர் அன்வர்ராஜா எம்.பி., அவரது உடலை பெற்றனர். பின் உடல் சிறப்பு மேடையில் பொது மக்கள்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மேகாலயா கவர்னர், மத்திய அமைச்சர்கள் முதலில் அஞ்சலி செலுத்திய பிறகு, அப்துல் கலாம் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு மல்லிகை மலர்கள் தூவப்பட்டு துஆ நடந்தது. மாநில அமைச்சர்கள்தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பொது மக்கள் பல கி.மீ., தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சிலர் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. 'பாரத் மாதா கீ ஜே', 'மறைந்த மண்ணின் மைந்தன் அப்துல் கலாமுக்கு ஜே' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் அதிகாலை 5 மணிக்கே வந்து வரிசையில் காத்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் நேற்று இரவு 1௦ மணி வரை அஞ்சலி செலுத்தினர்.பின்னர் உடல், கலாம் பிறந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


தலைவர்கள் மலரஞ்சலி:



பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள், காங்., மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன்,தங்கம்தென்னரசு, சுப.தங்க வேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வேலுச்சாமி, முருகவேல் மற்றும் நிர்வாகிகள்,ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராம

கிருஷ்ணன், இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு, எம்.எல்.ஏ., குணசேகரன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், முருகேசன், பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், தொழிற்சங்க மாநில பொருளாளர் முஜிபுர் ரகுமான், உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.பி.,க்கள் ராம்பாபு, விஸ்வநாதன், சித்தன், முன்னாள் எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, தலைவர் ஜெகதீசன், பொருளாளர் ஜீயர்பாபு, ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நடிகர்கள் விவேக், தாமு, வடிவேலு மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.அப்துல் கலாம் உடல் வருவதற்கு முன்னதாக வந்த மத்தியஅமைச்சர்கள் அஞ்சலி செலுத்துவோர் வந்து செல்ல வசதியாக உடலை வைப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் நீண்டநேரம் ஆலோசித்தனர். பின் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து சில ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.


மேடையில் தள்ளுமுள்ளு:



தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வந்த போது அவருடன் ஏராளமான தொண்டர்கள் வந்தனர். அனைவரும் மேடையில் ஏற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதுபோல தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வந்த போதும் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் மேடையிலிருந்து கீழே சரிந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் தாங்கி பிடித்து இறக்கினர். கண்ணாடி பெட்டிக்குஉள்ளிருந்த அப்துல் கலாம் உடலை விஜயகாந்த் உற்றுப்பார்த்து கண் கலங்கினார்.



சலசலப்பு:


தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதை படமெடுக்க முடியாதபடி மேடையை சுற்றி போலீசார் மற்றும் அதிகாரிகள் நின்று கொண்டனர். இதனால் போட்டோகிராபர்கள் அவர்களை தள்ளி நிற்கும்படி அடிக்கடி குரல் எழுப்பினர்.





இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி பங்கேற்பு: ''ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 30) காலை நடக்கும் அப்துல்கலாம் இறுதி சடங்கில்பிரதமர் மோடி பங்கேற்கிறார்'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.டில்லியில் இருந்து நேற்று மதியம் 1.15 மணிக்கு ராணுவ விமானத்தில் அப்துல்கலாம் உடல் மதுரை கொண்டு வரப்பட்டது. உடன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் வந்தார். பின், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு நடக்கும் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உறுதி செய்தார்.அவரை இழந்து தேசம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. வரும் 2020ல் இந்தியா அனைத்து

துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வல்லரசு நாடாக வேண்டும் என்பதே அவரது கொள்கை. அது நிறைவேற நாம் பாடுபடுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்றார்.



கலாம் மறைவுக்கு காரணம் என்ன: பொன்ராஜ் தகவல்:டில்லியிலிருந்து அப்துல்கலாம் உடலுடன் வந்த அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நேற்று ராமேஸ்வரம் கீழக்காடு மைதானத்தில் நமது நிருபரிடம் கூறியதாவது: உடல் சற்று பலவீனமாக இருந்தாலும் கூட அதை பொருட்படுத்தாமல் மாணவர்களை சந்திப்பதில் அலாதி ஆர்வம் காட்டுபவர் கலாம். கடந்த ஜூலை 27ம் தேதி மேகாலயா ஷில்லாங்கிற்கு சென்றார். அவர் படி ஏறும் போது அவருக்கு சற்று இளைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மேடையில் ஏறி பேச சென்றுள்ளார். பொதுவாக மலை பிரதேசங்களில் ஆக்ஸிஜன் குறைவு. அப்போது 'மாரடைப்பு' ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.