ஹெல்மெட் அணிவது குறித்து போலீசாரின் புதிய நிபந்தனைகள்

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது தொடர்பாக சென்னை போலீசார் புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஹெல்மெட் கட்டாயம் 
தமிழக அரசு கடந்த 17–ந் தேதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், வருகிற 1–ந் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் ம
ற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206–ன் கீழ், வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் உள்பட இருசக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மேற்படி ஆவணங்கள் திரும்ப அளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையாக அமல்படுத்த 
மோட்டார் வாகன சட்டம் 1988–ல் கூறப்பட்டுள்ள ஹெல்மெட் அணிவது தொடர்பான விதிமுறைகளை வருகிற 1–ந் தேதி முதல் சென்னை காவல்துறை கடுமையாக அமல்படுத்த உள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம் ஓட்டும் நபரோ அல்லது பின்னால் அமர்ந்து செல்பவரோ தலைக்கவசம் அணியாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் 1988–ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை ஐகோர்ட்டு கடந்த 8–ந் தேதி வழங்கியுள்ள ஆணையின்படியும், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206–ன்படியும், இருசக்கர வாகன ஓட்டியின் அசல் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் இருசக்கர வாகனம் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள் அனைத்தும், உரிய ஒப்புகைக்கு பின், பறிமுதல் செய்யப்பட்டு, அனைத்து அசல் ஆவணங்களும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல்கள் (ஜெராக்ஸ்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அசல் ஆவணங்கள் 
இருசக்கர வாகனம் ஓட்டும் விதி மீறுபவர் மேற்கூறப்பட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்காத பட்சத்தில், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 207–ன்படி இருசக்கர வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படும். இதற்கு உண்டான ஒப்புகை சீட்டு விதி மீறுபவருக்கு வழங்கப்படும்.
மேற்படி விதி மீறுபவர் அசல் ஆவணங்களை (ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ்) காவல் அதிகாரியால் அளிக்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்களைப் பெற்ற பின்னர், அதற்குண்டான ஒப்புகை சீட்டு அளிக்கப்பட்டு, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் விடுவிக்கப்பட்டு, மேற்படி அசல் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.
நீதிமன்றத்தில் பெறவேண்டும் 
மேலும், விதி மீறுபவர், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட்டையும், அதனை வாங்கியதற்கான ரசீதையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மோட்டார் வாகன சட்டம் 1988–ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளின்படி தங்களது அசல் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளின்போது, ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கும் பொதுநல நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
உறுதி ஏற்போம் 
இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் அனைவரும் தவறாமல் ஹெல்மெட் அணியுமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது. ஹெல்மெட் அணிவதனால் தங்களது விலை மதிப்பற்ற உயிரினை பாதுகாத்துக்கொள்வதுடன், தங்களது அசல் சான்றிதழ்கள் அல்லது வாகனங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்கலாம்.
நாம் இருசக்கர வாகனம் ஓட்டும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் தலைக்கவசம் அணிவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொள்வோம். சென்னை நகரினை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக ஆக்கும் இந்த பணியில் பொதுமக்கள் தங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் அளிக்குமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.