ரஷியாவில் கல்வி பயில விருப்பமா? வழிகாட்டும் ரஷிய கல்விக் கண்காட்சி

ரஷியாவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும், ரஷிய கல்விக் கண்காட்சி சென்னையில் மே 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சியை
தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் செர்கெய் எல்.கோடாவ், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

      இந்தக் கண்காட்சியை சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையம், ரஷிய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனம் ("ஸ்டடி அப்ராட்') ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ரஷியாவைச் சேர்ந்த முன்னணி மருத்துவ, பொறியியல் பல்கலைக்கழகங்கள் பங்கேற்றுள்ள இந்தக் கல்விக் கண்காட்சியை மே 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், மாணவர்கள் இலவசமாகப் பார்வையிட்டு ஆலோசனை பெறலாம்.

இது குறித்து ரஷிய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தின் ("ஸ்டடி அப்ராட்') இயக்குநர் சுரேஷ்பாபு கூறியது:

ரஷியாவில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரைப்படி, 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., வகுப்பினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வளவு இடங்கள்?

ரஷிய கல்விக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 6 முன்னணி மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கென சுமார் 450 இடங்கள் உள்ளன.

மேலும், மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றார்போல் ஆண்டுக்கு சுமார் ரூ. 2.5 லட்சம் முதல் கட்டணமாக பெறப்படுகிறது.

எந்தெந்த பல்கலைக்கழகங்கள்?

கண்காட்சியில் ரஷியாவின் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலை., கசான் மாநில மருத்துவப் பல்கலை., ட்வர் மாநில மருத்துவ அகாதெமி, ரஷியன் இன்டர்நேஷனல் ஒலிம்பிக் பல்கலை. உள்ளிட்ட 10 ரஷிய அரசு முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்கேற்றுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், "ஏவியேஷன், ஏரோஸ்பேஸ், நியுக்ளியர் பவர் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புக்கான சேர்க்கைக் கடிதத்தை மாணவர்களுக்கு வழங்குவர்.

கூடுதல் தகவல்களுக்கு...

ரஷியாவில் கல்வி பயில்வது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24988215, 24998215, 9282221221 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது www.studyabroadedu.com என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம்.