நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு

கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுயநிதி கல்வி நிலையங்களில், மொத்த முள்ள இடங்களில், 50 சதவீதம் கல்லூரி நிர்வாகத்தாலும், 50 சதவீதம், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்பப்படுகின்றன. இதில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் தான், புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக, கல்விக் கடன், 4 லட்சம் ரூபாய் வரை பெறும் போது, எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை.


புதிய விதிகள்:


* நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றாலும், கட்டாயமாக, மூன்றாம் நபர் ஜாமின் மற்றும் சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
* ஒரு வங்கி கிளை அளிக்கும் மொத்த கல்வி கடனில், 10 சதவீதத்துக்கு மேல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவோருக்கு அளிக்கக் கூடாது.
* பொறியியல் கல்லூரிகளுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் குழு பரிந்துரைத்த கட்டணத்துக்கு மேல், கல்விக் கடன் வழங்கக் கூடாது. இவ்வாறு, புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் அனைத்தும், சுயநிதி கல்லூரிகளில் படிப்போருக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் கள், இதனால் பாதிக்கப்படுவர் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் இட ஒதுக்கீட்டின் படி, மாணவர் சேர்க்கை நடக்கும்போது, அதிக மதிப்பெண் பெற்றவர்களில் இருந்து தான், சேர்க்கை துவங்கும். இது, ஒவ்வொரு இனத்தின் அடிப்படையிலான, ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும்.
நன்கொடை:

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, மதிப்பெண் அளவுகோல் இல்லை. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்களுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கிறது. அவர்கள், கல்லூரிக்கு நன்கொடை வழங்குவதே இதற்கு காரணம். அந்த நன்கொடை, அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை விட, பல மடங்கு அதிகம். சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே, கல்விக் கடன் வழங்க, அரசின் கல்விக் கொள்கை அனுமதிக்கிறது; நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவோர், இந்த கொள்கையின் கீழ் வரமாட்டார்கள். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து, கல்விக் கடன் பெற்றவர்களின் தேர்ச்சி விகிதம், கடனை திருப்பி செலுத்தும் சதவீதம் போன்றவை, சராசரிக்கும் குறைவாக உள்ளது. எனவே, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவோருக்கு, கல்வி கடன் வழங்குவதை கட்டுப்படுத்த, வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனித்தனியாக முடிவுகளை எடுப்பதால், ஒரு சில வங்கிகளில், 'நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கடன் வழங்க வேண்டாம்' என, முடிவெடுத்துள்ளன. சில வங்கிகள், புதிய விதிகளை வகுத்துள்ளன. அதன்படி, மொத்த கல்விக் கடனில், 10 சதவீதத்துக்கு மேல், நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்கக் கூடாது; வழங்கப்படும் கடனுக்கும், உத்தரவாதம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'நீதிமன்றம் செல்வோம்':

''நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு, கல்வி கடன் நிறுத்தப்பட்டால், நீதிமன்றம் செல்வோம்,'' என, கோவை அண்ணா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகள் சங்க செயலர், நடேசன் கூறினார்.
அவர், மேலும் கூறியதாவது: மொத்தம் உள்ள பொறியியல் கல்லூரிகளில், நன்கொடை வாங்கும் தகுதி உள்ள கல்லூரிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, நன்கொடை அளிப்போரால், கல்வி கட்டணம் செலுத்த முடியாதா என்ற கேள்வியை கேட்க முடியாது. நிர்வாக ஒதுக்கீடு சேர்க்கை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைகளின் படி தான் நடக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு - 40; பிற்படுத்தப்பட்டோருக்கு - 45; பிற வகுப்பினருக்கு - 50 மதிப்பெண் என, நிர்ணயித்து உள்ளனர். 'கவுன்சிலிங்' மூலம், இடம் கிடைக்காதவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு, நிர்வாக ஒதுக்கீடு தான் கை கொடுக்கிறது. கல்விக் கடன் இல்லையேல், அவர்களின் எதிர்காலம் சூனியமாகி விடும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கல்விக் கடன் வழங்குவதில், கடந்த ஆண்டும் இதே நிலை தான் இருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று, அனுமதி பெற்றோம். நடப்பாண்டிலும், இந்நிலை நீடித்தால், நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.