சென்னை கல்லூரிக்கு வேளாண் ஆராய்ச்சி கழக அங்கீகாரம்

சென்னை: சென்னை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரம் கிடைத்து உள்ளது.

இதுகுறித்து, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டில் உள்ள, 22 மாநில வேளாண் பல்கலைகளில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள, சென்னை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த, 5 ஆண்டுகளில், பல்கலை மற்றும் கல்லூரியின் சாதனைகள், ஆராய்ச்சி பணி, பன்னாட்டுக் கூட்டு முயற்சிகள், தொழில்நுட்ப பரிமாற்றம், விவசாயிகளுக்கான மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் மற்றும் பண்ணையாளர் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில், இந்த விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே, 2001 மற்றும் 2006ல், இதே அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது, மூன்றாவது முறையாக இந்தண்டும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நாமக்கல் மற்றும் சென்னையிலுள்ள கல்லூரிகளில், அனைத்து இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிதியுதவி, தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.