மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்கிறது

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நேற்று எடுக்கப்பட்ட சில முடிவுகள் விவரம்: l மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகை மற்றும் பயணப்படியை அதிகரிக்கும் வகையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பு அடிப்படையில், 29 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது.

இதன்படி, மாற்றி அமைக்கப்பட்ட நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள், 2014 ஏப்ரல், 1ம் தேதி முதல், உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை படி மற்றும் பயணப் படியை பெறலாம். இதனால், மத்திய அரசுக்கு, 128 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மத்திய அரசின் இந்த முடிவால், தமிழகத்தில், ஈரோடு, கோயம்புத்துார் நகரங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், கூடுதல் வீட்டு வாடகை மற்றும் பயணப் படியை பெறலாம். l குறு, சிறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்கள் துறையில், இந்தியா - சுவீடன் இடையே, ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், நேற்று ஒப்புதல் தரப்பட்டது.

ஆள் கடத்தலை தடுக்கவும், கடத்தலால் பாதிக்கப்படுவோரை, மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் ஒன்று சேர்க்கவும் தேவையான வழிமுறைகள் அடங்கிய ஒப்பந்தம், இந்தியா - வங்கதேசம் இடையே, விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.