அரசு பள்ளி கழிப்பறைகளுக்கு பிறந்தது விடிவு: உள்ளாட்சிகளிடம் பராமரிப்பு பணி

விருதுநகர்: அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில், போதுமான கழிப்பறை வசதியில்லை. இருக்கும் பள்ளிகளிலும், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 'அனைத்து அரசுப் பள்ளிகளிலும், கழிப்பறையை
உறுதி செய்ய வேண்டும்' என, சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணியை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 2,057 அரசுப் பள்ளிகளில், கழிப்பறை முறையாக இல்லை என, ஆய்வில் கண்டறியப்பட்டது; இதை பராமரிக்க, 160.77 கோடி நிதியை, கடந்த பட்ஜெட்டில், தமிழக அரசு ஒதுக்கியது. இதனால், 56.56 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர் எனவும், தமிழக அரசு தெரிவித்தது. இப்பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், கழிப்பறை பராமரிப்பு பணியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம், அரசு ஒப்படைத்து உள்ளது. தற்போதுள்ள துப்புரவு பணியாளர்களையோ, அல்லது தினக்கூலி அடிப்படையில், தேவையானவர்களை நியமித்தோ, கழிப்பறைகளை பராமரிக்கவும், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான நிதி, கல்வி வரி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இருந்து வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளிகள், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, தனி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதன்மூலம், மாணவர்களின் அவதி நீங்கும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.