48 மணி நேரத்தில் 'பான்' எண் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

புதுடில்லி :'பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி
செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, பொருட்கள், சேவை, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு, பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என, அந்த எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார்.இதன்மூலம், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம் என்பது, அரசின் எண்ணம்.
ஆனால், இந்த பத்து இலக்க எண் கொண்ட அட்டை, 21 கோடி பேருக்கு தான் கிடைத்துள்ளது; இன்னமும், நுாறு கோடி பேருக்கு மேல், அட்டை வழங்கப்பட வேண்டியுள்ளது.
'ஜன் தன்' வங்கிக் கணக்குத் திட்டம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, பான் எண் அவசியம் என்பதால், அனேகமாக, அனைவருக்கும் பான் எண் வழங்கவும், அதை விரைவாக வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பான் எண் பெற, இப்போது, குறைந்தபட்சம், ஒரு வாரம் முதல், இரு வாரங்கள் வரை ஆகும் நிலையில், அதை, 48 மணி நேரத்தில் வழங்கவும், அதற்காக இணையதள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.பான் எண், 48 மணி நேரத்தில் கிடைக்கவும், அட்டையை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும், வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பான் எண் பெற, வயது சான்றிதழுக்கான ஆதாரமாக, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 'ஆதார்' அடையாள அட்டை நகலை வழங்கலாம் என, வருமானவரித் துறை தெரிவித்து உள்ளது.