கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை; ஒத்துக்கொள்: அசத்தும் அரசு பள்ளி

மேலுார்: பள்ளியில் படிப்போடு பணத்தையும் சம்பாதிக்க கற்று கொடுக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே. அந்த பணியை சத்தமில்லாமல் சாதித்து வருகிறது மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இதன் பின்னணியில் இருப்பவர் ஆசிரியர் சூரியகுமார்.இருநாட்களாக
இலவச தொழில் பயிற்சியை 'பெட்கிராட்' நிறுவனத்தின் உதவியோடு மாணவியருக்கு கற்றுத்தருகிறார். அதுவும் தனது சொந்த செலவில். தொழிற்கல்விக்கான உபகரணங்கள் வாங்கும் செலவை தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி ஒத்துழைப்புடன் ஏற்று வருகிறார்.

முகாமில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் 517 பேருக்கு இலவசமாக அலைபேசி, பிரிட்ஜ் சர்வீஸ், டெஸ்க்டாப் பிரின்டிங், எம்பிராய்டரி, மெகந்தி, பியூட்டிசியன், பாஸ்ட்புட் தயாரிப்பு, மணப்பெண் அலங்காரம் ஆகியவை கற்றுத்தருகின்றனர். தமிழகத்திலே முதன்முறையாக இப்பள்ளியில்தான் தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்று இப்பயிற்சி நிறைவு பெறுகிறது.


மாணவி கவுசல்யா: இப்பயிற்சியால் புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதற்கேற்ப எளிமையாக பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆசிரியர் சூரியகுமார்:- மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறனை உருவாக்கிட வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்பயிற்சியின் மூலம் மாணவிகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். மாணவிகள் அச்சு பதிப்பு கலை பயிற்சி பெறுவதன் மூலம் அரசு பணிகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும். இதுபோன்று தொழில் பயிற்சி பெற விரும்பினால் 98654 02603ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.