கல்வி துறை, மாநகராட்சி இடையே 'லடாய்' : மணலி மண்டல பள்ளிகள் கவலைக்கிடம்

மணலி: திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை, மாநகராட்சி இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், மணலி மண்டலத்தில் பல பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எந்தெந்த பள்ளி...
திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி, மணலிபுதுநகர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி, மணலிபுதுநகரின் லட்சுமி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகள் நிலை படுமோசமாக உள்ளது. மணலிபுதுநகர் ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் குப்பை நிறைந்து காணப்படுகிறது. கழிப்பறைகள் படுமோசமாக உள்ளன. தரமற்ற வகையில் சத்துணவு சமைக்கப்படுகிறது. இதனால், அதை சாப்பிடாமல், மாணவர்கள் கீழே கொட்டுகின்றனர். வடபெரும்பாக்கத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. விறகு அடுப்பில், சத்துணவு சமைக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற சமையல் கூடத்தில் உணவு சமைக்கப்படுகிறது. மணலிபுதுநகர், லட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்கப்படுகிறது. முட்டை சரிவர தரப்படுவதில்லை. பயன்படாத கட்டடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன.
மாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கிடையாது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மாடுகள் மேயும் இடமாகவும் மாறிவிட்டது. கணினி அறை உள்ளது; ஆனால், அங்கு கணினிகள் இல்லை. மாணவர்கள் சாப்பிட, போதுமான தட்டுகள் கூட இல்லை.மணலி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் குப்பையாக காட்சியளிக்கிறது. தேவையற்ற மரச்சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன. மணலி பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சிறுநீர் கழிப்பறை படுமோசமாக உள்ளது. தீயம்பாக்கம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பயன்பாடற்ற கட்டடத்தால், விபத்து அபாயம் நிலவுகிறது.பள்ளிகளை பராமரிப்பதிலும், நிர்வகிப்பதிலும், திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை மற்றும் மாநகராட்சி இடையே சுமூக உறவு இல்லை என, கூறப்படுகிறது. இதனால், பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கல்வி தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை என, கூறப்படுகிறது. மணலிபுதுநகரில், மீஞ்சூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவியர் நீண்ட நாட்களாக நுாலகம் அமைக்கும்படி கூறி வருகின்றனர்.
விரைவில்...
இதேபோல், மணலி மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. பள்ளி கல்வி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட பள்ளிகள், விரைவில் ஆய்வு செய்யப்படும். பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை
வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.