'ஜாக்டோ'வுக்கு பணிந்தது அரசு: இன்று சமாதானம் பேசுகிறார் முதல்வர்

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' என்ற ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

கடந்த, 2003ல், மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய ஆசிரியர் சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் போராட்ட முடிவுகளுடன், ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன. இந்த குழு கூட்டம், கடந்த வாரம் சென்னையில் கூடி, தீவிரப் போராட்டம் நடத்த முடிவெடுத்தது. இதை அறிந்த, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவினரை அழைத்துப் பேச்சு நடத்தினர். ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு அரசு செவி சாய்த்து, முதல்வரை, ஜாக்டோ குழு இன்று சந்தித்துப் பேச அனுமதி தரப்பட்டுள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுவில், 22 பேர் உள்ள நிலையில், 15 பேர் மட்டும், இன்று காலை 10:00 மணியிலிருந்து, 10:30 மணிக்குள் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.