புவி வெப்பமடைதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை: மோடி பேச்சு

நாட்டில் எரிசக்தி புரட்சி அவசியம் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் புவி வெப்பமடைதலுக்கு எதிரான வலுமிக்க நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக கூறினார்.

மரபு சாரா எரிசக்தி முதலீட்டாளர் மாநாடு (ரீ-இன்வெஸ்ட்) இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் தொடங்கியது. அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக 3 நாட்களுக்கு நடத்தப்படும் இம்மாநாட்டை தொடங்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, "புவி வெப்பமடைதலுக்கு எதிரான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று உலகுக்கு ஒரு நாடு ஆதாரபூர்வமாகக் காட்டுகிறது என்றால், அது இந்தியாதான்" என்றார்.
மேலும், "நாம் இயற்கையை நேசிப்பதாலும், நதிகளைத் தாயாக வணங்குவதாலும்தான் இயற்கைப் பேரழிவுகளில் இருந்து மனித இனத்தைக் காப்பதில் அக்கறை செலுத்துகிறோம். புவி வெப்பமடைதலுக்கு எதிரான போரை எதிர்கொள்ளும் வழியை இந்தியாவால் காட்டிட முடியும்" என்றார் பிரதமர் மோடி.
மரபு சாரா எரிசக்தி உற்பத்தியின் முக்கியத்துவத்தை விவரித்த அவர், "மின்சக்தி துறையில் வளர்ச்சியுடன் கூடிய புதிய உச்சங்களை எட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வெண்டியது அவசியம்.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்,
சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் அதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை மேற்கொள்ள 50 நாடுகள் இணைந்து ஒரு குழு அமைக்கப்பட வேண்டியது அவசியம்" என்றார் மோடி.
டெல்லியில் உள்ள அறிவியல் மையத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை வெல்ஸ்பன் நிறுவனம் நடத்துகிறது. இந்த மாநாட்டுடன் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
மரபு சாரா எரிசக்தித் துறையில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதால் முதலீட்டாளர்கள், இத்துறை சார்ந்த பொருள்கள் தயாரிப்போர், மரபு சாரா மின்னுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு பாலமாக இந்த மாநாடு அமையும் என்று புதுப்பிக்கத்தக்க மரபு சாரா எரிசக்தித்துறை செயலர் உபேந்திர திரிபாதி தெரிவித்துள்ளார்.
மரபு சாரா எரிசக்தித் துறையில் முழு வாய்ப்புகளையும் பயன்படுத்தும் மத்திய அரசின் இலக்கினை எட்ட இந்த மாநாடு உதவும் என்று நம்புவதாக வெல்ஸ்பன் நிறுவனத்தின் துணைத் தலைவர் விநீத் மிட்டல் தெரிவித்துள்ளார்.