பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி பேட்டி

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.

சிறப்பு சிகிச்சை மையங்கள்

தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களுக்காக விழிப்புணர்வு மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலுக்கு ‘டாமி புளூ’ மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் எளிதாக குணப்படுத்தலாம். அனைத்து மருத்துவ நிலையங்களிலும் தேவையான அளவு ‘டாமி புளூ’ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வருமுன் தடுப்பது எளிது

இந்த நோயை வருமுன் தடுப்பது எளிது. எனவே, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்வி இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரி மற்றும் இதர மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பிரிவுக்கு என 221 படுக்கைகளும் 71 வென்டிலேட்டர், 824 தனிமனித தற்காப்பு உபகரணங்கள், முக உறைகள் மற்றும் பன்றி காய்ச்சல் நோயினை கண்டறிய தேவையான பரிசோதனை வசதிகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருந்துகள், இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகள் இருப்பில் உள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு மற்றும் தகவல் மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

எனவே பன்றிக் காய்ச்சல், டெங்கு போன்ற காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 சிறப்பு வார்டுகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் விமலா கூறியதாவது:-

பன்றிக் காய்ச்சலுக்காக சென்னை மருத்துவக் கல்லூரி அரசு பொது மருத்துவமனையில் ஆலோசனை மையம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவிலும், பின்னர் விபத்து சிகிச்சை பிரிவிலும் செயல்படுகிறது. பொதுமக்கள் ‘104’ சேவை மூலமாகவும், 9361482899, 9444340496, 044-24334811 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கைகள் உள்ள 3 சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து தற்காப்பு கருவிகள், வென்டிலேட்டர் ஆகியவற்றுடன் போதிய பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளன. நோயாளிகளுக்கும் உடனிருப்பவர்களுக்கும் மாத்திரைகள் 24 மணிநேரமும் கொடுக்கப்படும். காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் உடனே இங்கு வந்து பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு கையேடு

பேட்டியின்போது தமிழக அரசின் சார்பில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கையேடுகள் வெளியிடப்பட்டது. இதில் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, ஆர்.எம்.ஓ.க்கள் டாக்டர் இளங்கோ, டாக்டர் ஷீலாராணி, கண்காணிப்பாளர் டாக்டர் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.