மதிப்பெண் கணக்கீட்டை எளிதாக்கும் இணையதளம்: பணிச்சுமை குறைவதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சி


பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் திறன்களை மதிப்பிட்டு கிரேடு வழங்கும் பணியை எளிதாக்கும் இணையதளம் ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதன்மூலம் பணிச்சுமை குறைவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பள்ளி மாணவர்களை மதிப்பிட சிசிஇ (Comprehensive and Continuous Evaluation) என்ற தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை தமிழக பள்ளிக்கல்வித் துறை 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை இது பின்பற்றப்படுகிறது. இதன்படி, மாணவர்கள் எழுதும் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, அவர்களது செயல்பாடுகள், விளையாட்டுத் திறன், பேச்சுத் திறன், மற்றவர்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பீட்டு முறை, மாணவர்களை முழுமையாக மதிப்பிட உதவியாக இருக்கிறது. எனினும், ஆசிரியர்களுக்கு பெரும் பணிச்சுமையாக உள்ளது.
மதிப்பீட்டு முறை மாற்றப்பட்ட போதிலும், ஆசிரியர் - மாணவர் விகிதம் மாறவில்லை. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால், ஒவ்வொருவருக்கும் தனி கவனம் செலுத்தி ஆசிரியர்கள் அவர்களை மதிப்பிட வேண்டும். அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறன் அடிப்படையில் மதிப்பெண்களை பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். இந்த வேலைகளால் பாடம் எடுக்கும் நேரம் குறைவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் (way2cce.com) ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மாநிலக் கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் துணை பேராசிரியராக பணிபுரியும் அசிர் ஜூலியஸ் இந்த இணையதளத்தை கடந்த 2 ஆண்டுகளாக நடத்துகிறார். சுமார் 200 ஆசிரியர்கள் இதை பயன்படுத்துகின்றனர். இது குறித்து அசிர் ஜூலியஸ் கூறியதாவது:
சிசிஇ முறையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண்களைத் தனித்தனியே பதிவு செய்து, பிறகு மதிப்பெண்களுக்கான கிரேடு கணக்கிடப்பட வேண்டும். சிசிஇ முறையில் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண், மற்ற செயல்களுக்கு 40 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. எனவே, அதற்கும் தனித்தனியாக கிரேடு வழங்கி, பிறகு மொத்தமாக ஒரு கிரேடு வழங்கவேண்டும். இந்த இணையதளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைப் பதிவு செய்தால் போதும். அனைத்து வகையான முடிவுகளையும் இந்த இணையதளம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்தும் விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் கூறும்போது, ‘‘சிசிஇ மதிப்பீட்டு முறைக்கான இணையதளம் மிகவும் வசதியாக இருக்கிறது. இதில் மாணவர்களின் பெயர்களை ஒருமுறை பதிவு செய்தால், மீண்டும் மீண்டும் பதிவேடுகளில் எழுத வேண்டியதில்லை. இதனால், பணிச்சுமை குறைகிறது. மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தமுடிகிறது’’ என்றார்.