ரயிலில் இனி சினிமா பார்க்கலாம் : ரயில்வே அமைச்சகத்தின் புது திட்டம்

புதுடில்லி:ரயில் பயணிகள், இனி, சினிமா பார்த்தும், பாடல்களை கேட்டும், உற்சாகமாக பொழுது போக்கலாம். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான, 'ஈராஸ்' உடன் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

'ரயில்களில் நீண்ட துாரம் பயணம் செய்வோர், பொழுது போக்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்' என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில ராஜதானி ரயில்களில் பாடல்கள், இசை ஒலிபரப்பப்பட்டது. பின், படிப்படியாக அந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, 'பிராட் பாண்ட்' தொலை தொடர்புவசதி மூலம், ரயில் பயணிகள் பொழுது போக்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு உள்ளது.

சினிமா தயாரிப்பு மற்றும் வினியோக நிறுவனமான, 'ஈராஸ் குரூப்'பின் துணை நிறுவனமான, 'ஈராஸ் நவ்' உடன் இணைந்து, பயணிகளுக்கு, இந்த வசதியை ஏற்படுத்தி கொடுக்க, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, 'ஈராஸ் நவ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருஷிகா லுல்லா கூறியதாவது:
ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், 'ரயில் டெல்' பொதுத் துறை நிறுவனத்தின் உதவியுடன், ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்களிலும், 'வை-பை' வசதி ஏற்படுத்தி தரப்படும். பயணிகள் ரயில்வே ஸ்டேஷன்களில் அமர்ந்தபடி, இந்த,'வை-பை' வசதி மூலம், தங்கள் மொபைல் போன்கள் வழியாக, திரைப்படங்கள், பாடல்கள், இசை ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, பார்த்து பொழுதை போக்கலாம். எங்கள் நிறுவனம், ஏராளமான திரைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள் ஆகியவற்றின் உரிமங்களை பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


வசதியை பெறுவது எப்படி?



* 'ரயில் டெல்' நிறுவனம் மூலமாக, நாடு முழுவதும் உள்ள முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில், 'வை-பை' வசதி ஏற்படுத்தி தரப்படும்.
*இந்த வசதியை பயன்படுத்தி, தங்கள் மொபைல் போன் மூலமாக, ஈராஸ் நிறுவனத்தின் உரிமம்
பெற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை, பயணிகள் பதிவிறக்கம் செய்யலாம்.
* 'கத்தி, லிங்கா' போன்ற படங்களை ஈராஸ் நிறுவனம் தான் வினியோகம் செய்தது. 'கோச்சடையான்' படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்தது.