சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி: தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் விடைகள் தவறாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தேர்வின் தற்போதைய நிலை தொடர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

                  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த விஜிபிரியா தாக்கல் செய்த மனு: பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் எம்.எல். படித்துள்ளேன். அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 22.7.2014 இல் அறிவிப்பு வெளியிட்டது. அதில் சொத்துரிமைச் சட்ட பாடத்துக்கான பணியிடங்களில் ஒரு பணியிடம் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான எழுத்துத்தேர்வு 21.9.2014-இல் நடந்தது. பின்னர் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய சரியான விடைகளில் (கீ ஆன்சர்) 14 கேள்விகளுக்கான விடைகள் தவறாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு கொடுத்தேன். அதன்படி, 10 கேள்விகளுக்கான விடைகள் மாற்றி அமைக்கப்பட்டு எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிறகு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்ட சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டில் 20 மதிப்பெண் பெற்ற ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான், 16.5 மதிப்பெண் பெற்றுள்ளேன்.

எழுத்துத்தேர்வில் தவறான விடைகள் என சுட்டிக்காட்டப்பட்ட 14 கேள்விகளில் 10 விடைகள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டன. மீதமுள்ள 4 கேள்விகளுக்கான விடைகளை மாற்றவில்லை. எனவே தவறான விடைகள் அடிப்படையிலேயே அந்த 4 கேள்விகளுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. எனவே சரியான விடைகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால் எனக்கு 4 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். அவ்வாறு 4 மதிப்பெண்கள் கிடைத்தால் எனது மதிப்பெண் 20.5 ஆக உயரும்.

இதனால் விரிவுரையாளர் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எனக்கு கூடுதலாக 4 மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் எனக்கு விரிவுரையாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, சொத்துரிமை சட்ட விரிவுரையாளர் பணி இடங்களில் பிற்பட்ட சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டில் தற்போது உள்ள நிலை தொடர உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.