தகவல் உரிமை சட்டத்தில் தாமதமாக பதிலளித்த அதிகாரிக்கு அபராதம்

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவருக்கு தாமதமாக பதில் அளித்த பத்தமடை பேரூராட்சி செயல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
 
           நெல்லை மாவட்டம், பத்தமடை பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சுப்புலெட்சுமி. கரிசூழ்ந்தமங்கலத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பத்தமடை பேரூராட்சியில் அஜென்டாவில் இடம்பெறாமல் எந்தெந்த தீர்மானங்கள் எந்தெந்த தேதியில் விவாதிக்கப்பட்டது, தீர்மானங்களை முன்மொழிந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட 16 இனங்களில் தகவல் கேட்டு விண்ணப்பித்தார்.

இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் சுமார் 8 மாதம் கழித்து தாமதமாக தகவல் வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து, கணேசனிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலித்து உரிய அரசு கணக்கில் செலுத்துமாறு டவுன் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனருக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து கணேசன், இனிமேல் காலம் தாழ்த்தாமல் தகவல்களை வழங்குவேன் என்றும் தற்போது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யுமாறும் மன்னிப்பு கேட்டு தகவல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை தகவல் ஆணையம் நிராகரித்து விட்டது.