அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

அரசு அலுவலகங்களில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு, தற்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்தவர் வக்கீல் எஸ்.கருணாநிதி. இவர், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் புகைப்படம்

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்து. இதையடுத்து அவர் முதல்-அமைச்சர், எம்.எல்.ஏ. பதவிகளை இழந்தார். அதைத் தொடர்ந்து, முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.

ஆனால், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு சொத்துகளில் புதிய முதல்- அமைச்சர் புகைப்படத்தை வைக்காமல், இதுநாள் வரை ஜெயலலிதாவின் படமே வைக்கப்பட்டுள்ளது.

அகற்ற வேண்டும்

அரசு அலுவலகங்களில், ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்-அமைச்சர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, கே.காமராஜ், சி.ராஜகோபாலச்சாரி, தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் படத்தை மட்டுமே வைக்கவேண்டும் என்று அரசின் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு, அரசு அலுவலகங்களில் தற்போதைய முதல்-அமைச்சர் படத்தை வைக்கவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பன்னீர்செல்வத்தின் புகைப்படம்

இந்த மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து, தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் அரசாணை மற்றும் கொள்கை முடிவுக்கு எதிராக, வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் புகைப்படத்தை அரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை வைக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசாணை

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘அரசு அலுவலகத்தில் தலைவர்களின் படத்தை வைப்பது என்பது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த தலைவர் படத்தைத்தான் வைக்க வேண்டும். அந்த தலைவர் படத்தை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது. முக்கிய தலைவர்கள் படத்தை வைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. தலைவர்கள் படத்தை வைப்பது குறித்து தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று வாதிட்டார்.

கொள்கை முடிவு

அரசு கடந்த 2006-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, ஜனாதிபதி, பிரதமர், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, காமராஜ், ராஜாஜி, தந்தை பெரியார், பி.ஆர்.அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சிதம்பரனார், காயிதேமில்லத், இந்திராகாந்தி, முன்னாள் முதல்- அமைச்சர் மற்றும் தற்போதைய முதல்-அமைச்சர் ஆகியோரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தற்போதைய முதல்-அமைச்சர் ஆகியோரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கும்போது, தற்போதைய முதல்-அமைச்சர் படத்தை வைக்க வேண்டும் என்று மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது.

உத்தரவிட முடியாது

மேலும், அரசு அலுவலகங்களில் எந்த தலைவர்களின் படத்தை வைப்பது? என்று முடிவு செய்வது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். எனவே, தற்போதைய முதல்-அமைச்சர் படத்தை வைக்க வேண்டும் என்று அரசுக்கு இந்த ஐகோர்ட்டினால் உத்தரவிட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக, அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படத்தை வைப்பது தொடர்பாக தீர்க்கமான கொள்கை முடிவினை எடுத்து, அந்த முடிவினை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.