பெரம்பலூரில் இன்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

பெரம்பலூரில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) தொடங்குகிறது.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) முதல் 24-ம் தேதி வரை இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளுக்கு
ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர் மற்றும் நர்சிங் உதவியாளர் வெட்னரி, சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் பொதுப்பணி டிரேட்ஸ் மேன், சிப்பாய் கிளர்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் கல்வித்தகுதி சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியின் மேலொப்பத்துடன் இருப்பிடச் சான்று, ஆங்கிலத்தில் சாதிச்சான்று ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
முகாமில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கட்டண அடிப்படையில் உணவு வசதி, சான்றிதழ்களை நகல் எடுக்கும் வசதி, பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கும் வசதிகள் செய்துதரப்பட உள்ளன. முகாமுக்கான தேர்வு நடத்தப்படும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வளையங்களும், தனித்தனி கூடாரங்களும், பாதுகாப்பு கேலரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் உள்ளே சம்பந்தமில்லாத நபர்கள் நுழைய முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சனிக்கிழமை மாலையிலிருந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர்.