விருதுநகரில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகையில், 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். அதோடு, தேர்ச்சி சதவீதம் குறைந்த மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நவீன முறையில் பாடவாரியாக குறுந்தகடுகள் பள்ளிக் கல்வித்துறையால்  தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகடுகளை தலைமையாசிரியர்கள் பெற்று, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் வழங்கி தொலைக்காட்சி உதவியுடன் டிவிடி மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது, இம்மாவட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகள் அனைத்தும் சுத்தமாக வைக்கவும், சுற்றுச் சூழல் சுகாதார வளாகங்கள் கழிவு நீர் வாய்க்கால் ஆகியவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், டெங்கு தொடர்பாக மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியும் நடத்த வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விளக்கமாக அவர் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் பாடவாரியாக குறுந்தகடுகளும் வழங்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.