தொழில்நுட்ப அறிவுக்கு முக்கியத்துவம்,கணினி இனி அவசியம்; கவனிக்குமா அரசு!

கோவை: போட்டிகள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் முற்றிலும் அல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த 'கனெக்டிவ்- கிளாஸ் ரூம்' திட்டம்,
மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வினியோகம், பள்ளிகளுக்கு லேப்-டாப் மற்றும் கம்ப்யூட்டர் வினியோகம் என முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.அடிப்படை தொழில்நுட்ப அறிவை புகுத்தாமல், மாணவர்கள் கைகளில் லேப்-டாப் வழங்குவது எதிர்மறை விளைவுகளையே தற்போது உருவாக்கி வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், மேல்நிலை வகுப்புகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தனியார் பள்ளிகளில் துவக்க வகுப்பு முதலே அடிப்படை கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், பயன்பாடு என படிப்படியாக கற்பிக்கப்படுகிறது.

ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்ற பின்பே அடிப்படை இயக்கங்களை கூட கற்க முடிகின்றது. இதனால், போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பில் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவில், கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்களை அரசு வினியோகித்து வருகிறது. அதில், பாடம் கற்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், எந்த ஒரு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்பதை அரசு உணர்வது அவசியம். மேலும், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், குறைந்தபட்சம் பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமித்து, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும். அதன் பின்பே, கனெக்டிவ் - கிளாஸ் ரூம் போன்ற திட்டங்களில் வெற்றி பெற இயலும்.கோவை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் கொள்முதல் செய்ய, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி ஆசிரியர்கள் இல்லாததால், வீணாகி வருகிறது.

கல்வியாளர் பாரதி கூறுகையில், ''அரசு பள்ளி மாணவர்கள், திறமைகள் இருந்தும் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழித்திறன் இல்லாமல் நல்ல வேலைவாய்ப்பை இழக்கின்றனர். தற்போது முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டுள்ளது. அதே போல், தொழில்நுட்ப அறிவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தொடக்க பள்ளி முதலே, மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பாடப்பிரிவை உருவாக்கவேண்டும்,'' என்றார்.