தத்ரூபமாக நடந்த ராணுவ ஒத்திகை: பள்ளி மாணவ, மாணவியர் பிரமிப்பு

குன்னூர்: ராணுவ வீரர்கள் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியைக் கண்ட பள்ளி மாணவ, மாணவியர், முதலில் பீதி அடைந்தனர். சாதாரண ஒத்திகை நிகழ்ச்சி தான் என்பதை அறிந்த பின், நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ மையம் உள்ளது. இம்மையத்தின், 256வது ஆண்டுவிழா, வரும் டிச., 3ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கவுள்ளது. இவ்விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை, கலாசார கலை நிகழ்ச்சிகள், ராணுவ வீரர்களின் வீரதீர செயல் விளக்கங்கள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி, எம்.ஆர்.சி., ஸ்டேடியம் அருகே, ராணுவத்தினரின் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதே இடத்தில், கோவை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளும் நடந்ததால், அதில் பங்கேற்க வந்த மாணவ, -மாணவியர், ராணுவத்தினரின் வீரதீர செயல்களை கண்டு, முதலில் பீதி அடைந்தனர். பின், சாதாரண ஒத்திகை நிகழ்ச்சி தான் அது என்பதை அறிந்து, நிம்மதி அடைந்தனர்.