சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என லோக்பால் சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் லோக்பால் சட்டத்தின் கீழ் தங்களின் சொத்துக் கணக்கை சமர்ப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெயரிலும், மனைவி, குழந்தைகள் பெயரிலும் உள்ள சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

குரூப் ஏ, பி, சி பிரிவில் உள்ள சுமார் 26 லட்சம் அரசு ஊழியர்கள் இவ்விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். குரூப்-டி பிரிவில் வரும் அலுவலக உதவியாளர்களுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கையிருப்பு ரொக்கம், வங்கியிருப்பு, கடன் பத்திரங்கள், பங்குகள், காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, நகை, வாகனங்கள் என அனைத்து வித சொத்து மற்றும் கடன் விவரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.