பிரதமர் ஜன்தன் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு எப்படி?

புதுடில்லி: பிரதமர் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஆயுள் காப்பீடு வசதி வழங்கப்பட மாட்டாது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்று அழைக்கப்படும் இத்திட்டத்தை,
கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு துவக்குவோருக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு, 30 ஆயிரம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு, 5,000 ரூபாய் ஓவர் டிராப்ட் வசதி மற்றும் ரூபே டெபிட் கார்டு ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை களை, மத்திய நிதி சேவைகள் துறை உருவாக்கி உள்ளது. இதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள், மூல வரி பிடித்தம் அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்ட பயனாளி கள் ஆகியோர், ஆயுள் காப்பீடு வசதி பெற தகுதி இல்லை என, வரையறை செய்யப்பட்டு உள்ளது. ''திட்டத்தின் பயன் அனைவருக்கும் அல்ல; தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் சென்று சேர வேண்டும்,'' என்று நிதி சேவைகள் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.