ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் - DINAMANI

சென்னையில் பள்ளியில் புகுந்த கும்பல் ஆசிரியரை தாக்கியதைக் கண்டித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் பாஸ்கர்ராஜ். இவரை கடந்த (20.11.14) வெள்ளிக்கிழமை பள்ளிக்குள் நுழைந்த கும்பல் அடித்தும் பெண் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், வகுப்பறையில் இருந்த தளவாட பொருள்களை சேதப்படுத்தியும் சென்றனராம்.
இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவருமான பொன்.செல்வராஜ் தலைமையில் வகுப்புக்கு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.