செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்: இஸ்ரோ மையத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி



செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அனுப்பப்பட்டது.
திரவ எரிபொருள் இன்ஜின் சோதனை வெற்றி:

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலத்தின் நியூட்டன் 440 திரவநிலை எரிபொருள் இன்ஜின் நேற்று மதியம் 2.30 மணிக்கு முதல் சோதனை முயற்சி அடிப்படையில் 4 விநாடிகள் இயக்கப்பட்டது. மிக முக்கிய திருப்பமாக கருதப்படும் இந்த சோதனைக்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. கடந்த 300 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த மங்கள்யானின் முக்கிய திரவநிலை எரிபொருள் பிரதான இன்ஜினுக்கு கும்பகர்ணன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் நாளை (புதன்கிழமை) காலை 7.17 மணிக்கு மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். நாளை காலை 6.48 மணி முதல் 7.12 மணிக்குள் 24 நிமிடங்கள் மங்கள்யானின் திரவ எரிபொருள் இன்ஜின் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து காலை 7.30 மணி முதல் படிப்படியாக மங்கள்யானின் வேகம் விநாடிக்கு 22.1 கி.மீ-ல் இருந்து 4.4 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி வருகிறார்:
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைந்ததும் காலை 8 மணியில் இருந்து 8.15 மணிக்குள் தகவல்களை அளிக்கத் தொடங்கும். இந்த நிகழ்வை நேரடியாக காண பெங்களூர் இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.